சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (21.06.2024) மதியம், மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு 6வது தெருவிலுள்ள ஒரு ஸ்பா சென்டரில் கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மைக்கேல் மோல்சம் (26), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 10 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்ட மைக்கேல் மோல்சம் விசாரணைக்குப் பின்னர் நேற்று (21.06.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 10 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.