மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்தும் குழந்தை வேண்டாம் என்று சீமான் மறுத்து கருச்சிதைவு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கடந்த சில ஆண்டுகளுக்கு போலீசில் புகார் அளித்தார். சீமான் மீது குற்றம் சாட்டி விஜயலட்சுமி பேசும் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது ஆபாசப்படத்தை அனுப்பி மிரட்டல் விடுப்பதாக சீமான் மீது புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது.
‘‘நான் தற்போது என் சகோதரி உஷா தேவியுடன் பெங்களூருவில், நாகர்பாடி என்ற இடத்தில் வசித்து வருகிறேன். கடந்த 2007ம் ஆண்டு ‘வாழ்த்துக்கள்’ திரைப்படத்தில் சீமான் இயக்கத்தில் நான் நடித்தேன். அதன் மூலம் சீமான் எனக்கு அறிமுகமானார். அப்பொழுது என் அக்கா உஷா தேவிக்கும் அவரது கணவர் ராஜ்பாபுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் எனது குடும்பம் நிலைகுலைந்து போனது. ராஜ்பாபு அரசியல் பிரபலம் என்பதால் சீமானிடம் உதவி நாடி சென்றேன். இந்நிலையில் சீமான் ஒரு நாள் தன்னுடைய நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு எங்களை வரவழைத்து அவருக்கென்று யாரும் கிடையாது. திருமணமாக வில்லை. எனக்கு எந்த ஒரு வரதட்சனையும் கொடுக்க வேண்டாம்.
திருமண செலவை நானே செய்து கொள்கிறேன். உங்களைப் போன்று ஈழத் தமிழர் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதே எனக்கு போதுமானது, அதுவே எனக்கு மன நிறைவு என்று சீமான் என்னிடம் கூறினார். சீமான் அடிக்கடி வற்புறுத்தியதாலும், எனது தாய், என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன். உங்கள், மகள் விஜயலட்சுமியை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும், விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கெஞ்சியதன் பேரில் நான் சீமானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்தின் போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள். பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். மாங்கல்யம் கட்டச் சொல்லும் போது நான் பெரியாரைப் பின்பற்றுபவன் மேலும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கும், கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து விட்டார். அதனால் மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமானும் நானும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினோம்.
‘நமது திருமணம் மேதகு.வே.பிரபாகரன் தலைமையில் உலகம் போற்றும் வகையில். நாம் நடத்த வேண்டும் அது வரையில் இந்த திருமணத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்’ என்று சீமான் என்னிடம் கூறினார். அன்றைய தினத்தில் எனக்கும் சீமானுக்கும் எனக்கு விடுதியில் சாந்தி முகூர்த்தம் பெரியவர்கள், உறவினர்கள் ஆசியுடன் நடந்தது.
மேலும் என்னுடைய வேளச்சேரி வீட்டில் நானும் என் கணவர் சீமானும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். எனக்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் சீமான் தன்னுடைய அரசியலில் ஒரு உறுதியான நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டார். அதனால் நான் 7 முறை கருவுற்றும் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை சீமான் அவற்றை அபார்ஷன் செய்து விட்டார். இதனால் என்னுடைய உடலும், உள்ளமும், பலவீனம் ஆனது. எங்கள் குடும்பம் இதனால் நிம்மதி இழந்தது.
நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ. 60 லட்சம் பணம், ரூ. 35 லட்சத்துக்கு நகைகளை – சிறுக, சிறுக என்னிடம் இருந்து சீமான் பறித்துக் கொண்டார். இந்நிலையில் நான் சீமானுக்கு மதிய உணவை சமைத்து வளசரவாக்கம் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்வேன். அவர் சாப்பிட்ட பிறகு 4, -5 மணி வரை அவரோடு இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வது பழக்கம். Ford- காரில் என்னை அவரது ஆட்கள் வேளச்சேரி வீட்டில் என்னை இறக்கி விட்டுச் செல்வார்கள். ஒரு நாள் என்னுடைய செல்போனுக்கு பேசிய தேன்மொழி என்ற பெண் தனக்கும், சீமானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் பாலுமகேந்திரா மற்றும் சுகாசினி தலைமையில் நடைபெற்றுள்ளது. திருமண நாளுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் யார் சீமானை அலுவலகத்திற்கு வந்து செல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்.
நான் அந்த பெண்ணிடம் என் கணவர் என்று கூறினேன். அப்பொழுது அந்த பெண் என்னை ஏமாற்றியது போல் சீமான் உங்களையும் ஏமாற்றி உள்ளார் என்று என்று கூறினார். பிறகு சீமானிடம் இதைப் பற்றி கேட்ட போது அவர் மழுப்பலாக பேசி சண்டையிட்டு அடித்தார். பிறகு இயக்குனர் சேரனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் ஆமாம் என்று கூறினார். இந்நிலையில் சீமான் அவர்களின் அடி ஆட்களை கடந்த 2011ம் ஆண்டு அவரது அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். நான் உடனே சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளித்தேன். அதன் பேரில் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 417, 420, 354, 376, 506(1) IPC & SC4 of TNPWH Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சீமான் அப்போதிருந்த அதிமுக செல்வாக்கைப் பயன்படுத்தி கைதாகாமல் தப்பித்து விட்டார்.
அஇஅதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளரான வக்கீல் தடா சந்திரசேகரை வைத்து என்னிடம் சமாதானம் பேசி சீமானுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து நான் கொடுத்த புகார் மனுவுக்கு காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில்தான் என்னிடம் கணவராக வாழ்ந்து கொண்டே கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்ய மறைமுகமாக வேலை செய்து கொண்டார். இந்த தகவல் கயல்விழிக்கும், சீமானுக்கும் திருமணமான பிறகுதான் எமக்கே தெரிந்தது. சீமான் அதிமுக அரசை ஆதரித்து இருந்தாலும். கயல்விழி முன்னால் சபாநாயகர் காளிமுத்து மகள் என்பதாலும் நான் கொடுத்த புகார் மனுவிற்கு அப்பொழுது காவல் துறையினர் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசும் அந்த கட்சியில் இருந்த நபர்களுக்கு சீமானும், சீமான் அடியாட்களும் அச்சுறுத்தி பயமுறுத்தியதால் நான் என் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தேன்.
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு மாறி திமுக அரசு வந்ததால் என் புகாருக்கும் எனக்கும் நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் சட்டரீதியாக முயற்சி செய்தபோது சீமான் கட்சியைச் சார்ந்த மதுரை செல்வம் என்ற நபர் என்னை தொடர்பு கொண்டு, ‘அக்கா நீங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மீது புகார் ஏதும் கொடுக்க முயற்சி செய்யாதீர்கள், உங்கள் மாமா சீமான் உங்களை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக கூறியுள்ளார்
இதனால் உங்களுக்கு மாத மாதம் 50,000- ஆயிரம் பணம் சீமான் அனுப்பச் சொல்லி உள்ளார். அந்த பணம் இந்த ஆண்டு 2023 மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை 50,000 அனுப்பினார்கள். நான், என்னால் பெங்களூரில் தனியாக வாழ முடியாது. என்னை சென்னைக்கு வரவைத்து சீமானை என்னுடன் வாழ்க்கையை நடத்த சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ஆனால் சீமானின் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வமும் எம்மை குறித்து தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் வதந்தியையும் பரப்பினார். இது குறித்து அவரிடம் நான் கேட்டதற்கு என்னை whatsapp பில் தொடர்பு கொண்டு எமக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் எம்மை குறித்து ஏதோ ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டினார்கள்.
எனவே ஐயா அவர்கள் என்னை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து என்னுடன் கணவராக வாழ்ந்து என் வயிற்றில் இருந்த கருவை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து என்னுடைய பணம் நகைகளை பறித்து என்னை இழிவாக பேசி எம்மை தற்கொலைக்கு தூண்டி என் வாழ்கையை சீரழித்த சீமான் மீதும் சீமானின் தூண்டுதலின் பேரில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி என்னை மிரட்டிய மதுரை செல்வம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு என் உடல்நிலை சரியில்லாத என் சகோதரிக்கு பாதுகாப்பு அளித்து எமக்கு நீதியும் நியாயத்தையும் வழங்குமாறு ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.