ரூ. 500 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 12.60 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கி துணை பொது மேலாளர் உட்பட 3 நபர்களை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பீலமேடு, வி.பி ரோடு, கனகபில்லர் தெருவைச் சேர்ந்தவர் ராஜன்பாபு, 60. இவர் VL Energy India Pvt. Ltd என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜன்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் K.G இன்வெஸ்ட்மென்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சரவணன் (எ) அய்யாசாமி என்பவரை அணுகி ரூ.500 கோடி லோன் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார். சரவணன் (எ) அய்யாசாமி லோன் ஏற்பாடு செய்வதாக ராஜன் பாபுவிடம் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சரவணன் (எ) அய்யாசாமி ராஜன்பாபுவை தொடர்பு கொண்டு ரூ. 500 கோடி லோன் ஏற்பாடு செய்து விட்டதாகவும், சென்னை வரும்படி கூறியுள்ளார்.
இதன்படி கடந்த 11.08.2023 அன்று ராஜன்பாபு கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்துள்ளார். சரவணன் (எ) அய்யாசாமி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 3 நபர்கள் மற்றும் மேற்படி ராஜன்பாபுவையும் அழைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று, வங்கி துணை பொது மேலாளர் பாலாஜி என்பவரை அறிமுகப்படுத்தி, வங்கி துணை பொது மேலாளர் பாலாஜி, ராஜன் பாபுவிடம் ரூ.500 கோடியை தங்களது கணக்கில் வரவுவைக்க ரூ. 12.60 கோடி முண்பணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜன் பாபு உடனே ரூ. 12.60 கோடிக்கான காசோலையை வங்கி துணை பொதுமேலாளர் பாலாஜியிடம் கொடுத்துள்ளார்.
உடனே பாலாஜி K.G இன்வெஸ்ட்மென்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளுக்கு ரூ. 12.60 கோடியை RTGS மூலமாக பணபரிவர்த்தனை செய்துள்ளார். உடனே ராஜன்பாபு தனது நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ. 500 கோடி பணம் குறித்து கேட்ட போது, சற்று நேரத்தில் வரவுவைக்கப்படும் என சரவணன் (எ) அய்யாசாமி கூறிவிட்டு வங்கியிலிருந்து வெளியேறியுள்ளார். ராஜன்பாபு வங்கி துணை பொதுமேலாளர் பாலாஜியிடம் பணம் குறித்து கேட்டபோது அவரும் உடனே வந்துவிடும் என மழுப்பலாக கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜன்பாபு இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உரிய விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மேற்படி மோசடியில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி துணை பொது மேலாளர் பெரம்பூரைச் சேர்ந்த பாலாஜி, 29, தனியார் K.G இன்வெஸ்ட்மென்ட் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த புவனேஷ்வரன், அரும்பாக்கம் கோவிந்தன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும் தனிப்படை காவல் குழுவினர் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ. 12.60 கோடியில் ரூ. 2.60 கோடி உடனடியாக ராஜன்பாபு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும் பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ. 10 கோடி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளால், எதிரிகளின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சரவணன் (எ) அய்யாசாமி உட்பட மற்ற குற்றவாளிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மேற்படி 3 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் 12.08.2023 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.