ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ந பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தாராசந்த். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் ‘எனக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையில் 1 கிரவுண்ட் 1,262 சதுரடிகள் கொண்ட நிலம் மற்றும் வீடு உள்ளது. அதனை எனது தாயாரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான பொது அதிகாரம் தயாரித்து சொத்தை விற்பனை செய்துள்ளனர், மேலும் வங்கியில் அந்தச் சொத்தினை அடமானம் வைத்து ரூ. 3,03,28,000- கடன் பெற்றும் சிலர் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அருண் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நில மோசடி தடுப்புப்பிரிவிற்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் துணை ஆணையாளர், நிலமோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில் தனிக்குழு போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59) என்பவரை 26.04.2024 அன்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஸ்ரீதர் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சென்னை நகரில், சொத்துக்கள வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.