சென்னை, கே.கே.நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் சுமார் ரூ. 1 கோடி பணம் எடுத்து வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை, திநகர் துணைக்கமிஷனர் ஆங்கிட் ஜெயின் மேற்பார்வையில், அசோக்நகர் சரக காவல் உதவி ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், முதல்நிலை காவலர்கள் சதிஷ்குமார், மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேற்று (05.11.2023) மதியம் சுமார் 03.10 மணியளவில், கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் அமிர்த மஹால் எதிரில் உள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த Maruthi Suzuki வாகனத்தின் (பதிவு எண் TN 14 Y 1913) அருகில் சென்று விசாரணை செய்தபோது, காரில் வந்த 4 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, அதில் கருப்பு நிற டிராவல் பையில் சுமார் 1 கோடி ரூபாய் பணம் வைத்திருந்ததும், அப்பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
அதன்பேரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் அதிகளவு பணம் எடுத்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த எஸ். கார்த்திகேயன் (33), மயிலாடுதுறை மற்றொரு ஆர். கார்த்திகேயன், (45), இலங்கையைச் சேர்ந்த கமலநாதன் (47), சென்னை மடிப்பாக்கம் வெங்கடகிருஷ்ணன் (33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 1,00,01,000/- (ரூபாய் ஒரு கோடியியே ஒரு ஆயிரம் ரூபாய் மட்டும்), கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, பிடிபட்ட மேற்படி நான்கு நபர்கள், கைப்பற்றப்பட்ட பணம் ரூ. 1 கோடியே 1 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை, மாம்பலம் வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் முன்னிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள உதவி இயக்குநர், புலனாய்வு பிரிவு, வருமான வரித்துறை அவர்களிடம் மேல்நடவடிக்கைகாக ஒப்படைக்கப்பட்டனர்.