ரூ. 1.25 கோடி நிலமோசடி: 3 பெண்கள் உள்பட 4 கேடிகள் கைது: சென்னை மத்தியக்குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை
ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் மேலும் 3 பெண்கள் உட்பட 4 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. சென்னை எர்ணாவூர், ஜெயஹிந்த் நகரிலுள்ள 2,016 சதுர அடிகள் கொண்ட இடத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு சொந்தமான சொத்திற்கு சென்னை, மாதவரம் பால்பண்ணை கே.கே.தாழை குமரன் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஆள்மாறாட்ட நபரிடமிருந்து மோசடியாக பொது அதிகாரம் பெற்றுள்ளார். பின்னர் அதனை சரவணன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இவ்வாறாக ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் புகார்தாரரின் சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரமேஸ்வரி சென்னை நகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில் (LFIW) வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின் பேரிலும், நில மோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் வழக்குப் பதிவு செய்து, நில மோசடி புலனாய்வு பிரிவ காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ருக்குமணி (63), ராஜேஸ்வரி (60), பரமேஸ்வரி போல் ஆள்மாறாட்டம் செய்த நபரான நாகேஸ்வரி (70), முருகன் (50), ஆகியோரை திருவொற்றியூர் மற்றும் ஆவடி பகுதிகளில் வைத்து நேற்று (03.04.2025) கைது செய்தனர். விசாரணைக்கு பின் 4 பேரும் CCB & CBCID சிறப்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர், எழும்பூர் அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.