விருகம்பாக்கத்தில் போலீஸ் வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது

157

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் போலீஸ் சட்டை அணிந்து கொண்டு கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் சட்டை, பணம் ரூ. 200-, 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம், ரெட்டி தெருவில் வசித்து வரும் லோகேஷ்வரன் (வயது 25). இன்று (09.11.2023) அதிகாலை சுமார் 01.30 மணியளவில் விருகம்பாக்கம், ரெட்டி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு போலீஸ் மேல்சட்டை அணிந்து வந்த ஒரு நபர், தான் காவலர் என்று கூறி, கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் ரூ. 200-ஐ பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து லோகேஷ்வரன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நாகமணி (வயது 29) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து போலீஸ் காக்கி யூனிபார்ம் சட்டை, பணம் ரூ. 200-, 1 கத்தி மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரி நாகமணி என்பவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி நாகமணி விசாரணைக்குப் பின்னர், இன்று (09.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.