90 வயது மூத்த குடிமகனின் குறையை உடனடியாக தீர்த்து வைத்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

205

90 வயது மூத்த குடிமகனின் குறையை உடனடியாக தீர்த்து வைத்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

 

சென்னை, பெசன்ட்நகர், கலாசேத்ரா காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன், (வயது -90). இவருக்கு தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திருவான்மியூரில் உள்ள 708 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 20.11.1995 அன்று திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 60 லட்சம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கிரைய ஆவண பத்திரம் 14.07.2021 அன்று திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலையில் தொலைத்துவிட்டதாக முதியவர் ராஜகோபாலன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மனு ரசீது (CSR) வழங்கி மேல் விசாரனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக ராஜகோபாலன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மின் -அஞ்சல் (E-mail) முகவரிக்கு கடந்த 13ம் தேதியன்று மின்னஞ்சல் மூலம் தனது தொலைந்து போன ஆவணங்களுக்கான காவல்துறை சான்றிதழ் விரைந்து வழங்க ஆவண செய்யுமாறு கோரியிருந்தார். அது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை நகர குற்ற ஆவணக் காப்பகப்பிரிவு காவல்துறையினர் 90 வயது மூத்த குடிமகன் ராஜகோபாலனுக்கு அவரது காணாமல் போன வீட்டு பத்திரத்திற்கான Non -Traceable Certificateஐ வழங்கினர். காவல்துறையின் சான்றிதழ்களை பெற்ற ராஜகோபால், தனது புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டதற்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோருக்கு மனதார நன்றியை தெரிவித்தார்.