பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு மேற்கொண்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பள்ளிக்குழந்தைகளுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை வேப்பேரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வே.ரா சாலையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று 25.07.2023 நடந்தது. வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கிய கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு, கையெழுத்து முகாமினை துவக்கி வைத்தார்.
மேலும், சாலை சந்திப்பில் சாலைப் பயணிகளிடம் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பை பாராட்டி சான்றிதழ்களையும் வழங்கினார். போக்குவரத்து பாதுகாப்பு பயிற்சி பெற்ற சுமார் 120 பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் பயன்படுத்தல், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் நிறுத்தல் கோட்டிற்கு கீழ்ப்படிவது போன்றவற்றை சிக்னல் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், போக்குவரத்து இணைக்கமிஷனர் மயில்வாகனன் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களை பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு உழைப்பாளர் சிலை சந்திப்பு, லஸ் சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா, சென்ட்ரல் லைட் பாயின்ட் சந்திப்பு மற்றும் நந்தனம் சந்திப்பு ஆகிய இடங்களில் குழந்தைகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.