போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் ஆத்திரம் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை

162

சென்னை எம்ஜிஆர் நகரில் போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கொவில் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளர் லோகனாதனின் மகன் அஜய் (வயது 17). அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ம் தேதி மாலை 6.30 மணியளவில் கடைக்குச் செல்வதாக கூறி வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணாததால் அது தொடர்பாக லோகநாதன் எம்ஜிஆர் நகர் போலீசில் 27ம் தேதியன்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். லோகநாதனின் செல்போன் எண் மூலம் நடத்திய விசாரணையை அடுத்து எம்ஜிஆர் ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த டேவிட் (வயது 25) என்பவரை மறுநாள் 28ம் தேதி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பெயிண்டர் கண்ணபிரான் (24), பல்லாவரத்தைச் சேர்ந்த ரவுடி சரவணன் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போதை மாத்திரை விற்று வந்துள்ளனர். கண்ணபிரான் சரவணனிடம் Tidol மாத்திரைகளை வாங்கி அதற்குண்டான ரூபாய் 15,000- தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கண்ணபிரான் போதை மாத்திரைகளை காணாமல் போன பள்ளி மாணவன் அஜய் மற்றும் பலர் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். கண்ணபிரான் விற்ற பணத்தை சரவணனிடம் தராமல் தனியாக போதை மாத்திரை பிஸ்னஸ் செய்து வந்துள்ளார்.

இதனால் சரவணனும், டேவிட்டும் ஆத்திரம் அடைந்துள்ளனர். கடந்த 26ம் தேதியன்று மாலை 6 மணியளவில் கண்ணபிரான் வீட்டுக்கு சென்று அவரை தேடியுள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்பதால் 26ம் தேதியன்று மாலை 6.30 மணியளவில் சரவணன் மற்றும் டேவிட் இருவரும் அஜய் வீட்டுக்கு சென்று அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர். எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோடு, வடிகால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேற்புறத்தில் டேங்க்கின் மீது அமர்ந்து போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர்.

சரவணன், அஜய் ஆகியோர், கண்ணபிரானுக்கு எதற்காக மாத்திரை விற்று பணத்தை கொடுக்கிறீர்கள், அதற்கான பணத்தை எங்கே என கேட்டு மிரட்டி கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். இதனால் பள்ளி மாணவன் அஜய் பயந்து ஓடி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து காலில் அடிபட்டுள்ளது. சரவணன் மற்றும் டேவிட் அவரைப் பின்தொடர்ந்து சென்று எம்ஜிஆர் நகர் புல் தோட்டம் அருகில் சென்றதும் 1 அடி நீளமுள்ள கத்தியால் கழுத்து, மார்பு பகுதியில் அஜய்யை அறுத்து கொலை செய்து விட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் வேளச்சேரி சென்று விட்டனர். பின்பு டேவிட்டை அங்கே விட்டு விட்டு சரவணன் தப்பிச் சென்று விட்டதாக டேவிட் பரபரப்பு வாக்குமூலம் அளித்தான்.

அதனையடுத்து போலீசார் டேவிட்டை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த அஜய்யின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான சரவணனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சரவணன் மீது பல்லாவரம், மாம்பலம், சங்கர் நகர், எம்ஜிஆர் நகர் காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேவிட்டிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.