காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறை வாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

143

சென்னை நகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல் ஆணையாளர்கள் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் (One Day Workshop on Well-Being) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று (15.07.2023) எழும்பூரில் உள்ள காவல் அதிகாரிகள் விடுதியில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள காவல் உயரதிகாரிகளுக்கு, ஒரு நாள் நிறைவாழ்வு (Well Being) பயிற்சி வகுப்பை அவர்கள் துவக்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் காவல் அதிகாரிகள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்த விளங்கவும், மனநலனையும், உடல் நலனையும் பேணி காக்க தகுந்த மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தங்களது கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதும் குறித்தும், பணியின் போது சக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிறைவாழ்வு பயிற்சி வகுப்பு காவல் கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். காவல் மருத்துவர்கள் நம்பி மற்றும் சேகர்காசி ஆகியோர் மேற்படி நிறைவாழ்வு பயிற்சி வகுப்பை நடத்தி, மனநலம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்த நிறைவாழ்வு பயிற்சி முகாமில் சென்னை பெருநகர கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு) லோகநாதன், (தலைமையிடம்), மகேஷ்வரி, (மத்திய குற்றப்பிரிவு), அனைத்து காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.