சிறந்த காவல் பணியாற்றிய 18 காவல் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்
சென்னை நகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த தண்டையார்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், தலைமைக்காவலர் ரீகன், முதல்நிலை காவலர்கள் உமாபதி, முத்துகுமார், காவலர் திலீப்குமார், கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மல்லிகா (தற்போது ஆவடி காவல் ஆணையரகம்), பெண் காவலர் வைஷ்ணவி, திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார், பெண் உதவி ஆய்வாளர் பெனாசிர் பேகம் (K-4 அண்ணாநகர் காவல் நிலையம்), சிறப்பு உதவி ஆய்வாளர் சீனுவாசன், முதல்நிலை காவலர்கள் பவுன்ராஜ், ஸ்ரீதர், காவலர் ஸ்ரீதர், திருவல்லிகேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பால்ராஜ், சுகுமார், முத்துசாமி, தலைமைக்காவலர் சிவகுமார், முதல்நிலை காவலர் மணிமுத்து ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 9 காவல் ஆளிநர்கள் என 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (15.07.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

தண்டையார்பேட்டை காவல் குழுவினர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தீ வைத்து கொளுத்திய குற்றவாளிகளை கைது செய்தும், கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் குழுவினர், போக்சோ வழக்கில் எதிரிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் கிடைக்க செய்தும், திருமங்கலம் காவல் குழுவினர் செல்போன் பறிப்பு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தும், திருவல்லிக்கேணி காவல் குழுவினர் பல்வேறு இடங்களில் இஸ்திரி பெட்டிகளை திருடிய குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்தனர்.