போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார்
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமகன் M.V. ராஜகோபால், (வயது 84). இவர் கடந்த 04.10.2023 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமுக்கு வந்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். தனக்கு சொந்தமாக வளசரவாக்கம், திருப்பூர் குமரன் தெருவில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 2,400 சதுரடி வீட்டுடன் கூடிய நிலத்தை, தனது மகள்கள் மற்றும் மருமகன்கள் தன்னை கவனித்துக் கொள்தாக கூறி ஏமாற்றி தான செட்டில்மென்ட் மூலம் மேற்படி இடத்தை பெற்றுக்கொண்டு, தற்போது தன்னை சரிவர கவனிக்கவில்லை எனவும், தான் எழுதிக்கொடுத்து தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் மனு கொடுத்தார்.
இந்த மனு மீது விரைந்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், மூத்தகுடிமகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், மத்திய குற்றப்பிரிவு, காவல் துணை ஆணையாளருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையாளர்-III, ஆரோக்கியம் மற்றும் நிலமோசடி விசாரணை பிரிவு, காவல் ஆய்வாளர் பிரபா மற்றும் காவல் குழுவினர், இன்று (06.10.2023) வளசரவாக்கத்தில் உள்ள மூத்தகுடிமகன் ராஜகோபால் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மனுதாரர் ராஜகோபாலிடம் கனிவாக விசாரணை செய்து, அவரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றார். மேலும், எதிர்மனுதாரர்களாகிய மகள்கள் மற்றும் மருமகன்களிடம் விசாரணை மேற்கொண்டு, தங்களது மனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தங்களது குறைகளை தீர்ப்பதாக, மூத்தகுடிமகன் ராஜகோபாலிடம் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுன்பேரில், துணை ஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவசர உதவி தேவையெனில் எப்பொழுதும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து, அவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.