நியோ மேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மோசடி வழக்கு: 3வது மனு மேளாவில் குவிந்த மனுக்கள்

208

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 20.06-.2023 03/2023 u/s 406, 420 r/w 34 IPC & Section 5 of TNPID Act and 3, 4, 5, 21 (1) (2) (3), 22, 23, 25 of BUDS சட்டம் 2019 புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாள் 20.06.2023 முதல் தகவல் அறிக்கையில் 5 நிறுவனங்கள் மீதும் 3 இயக்குநர்கள் மீதும் மற்றும் 3 Team Heads ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணையின் போது குற்றத்தில் ஈடுபட்ட மேலும் 20 நிறுவனங்கள் மற்றும் 61 நபர்கள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களும், நபர்களும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 25 நிறுவனங்கள் மற்றும் 67 தனி நபர்கள் உள்பட மொத்தம் 92 பேர் இவ்வழக்கில் கடந்த மாதத்தில் மட்டும் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 08.09.2023ந்தேதி பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, ஐஜி சத்யப்பிரியா ஆகியோரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் எஸ்பி ஜோஷ் தங்கையா தலைமையில் மூன்றாவது மனு மேளா மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது.

அது தொடர்பாக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இந்த மனு மேளா நடத்தப்படுவதன் நோக்கம் என்னவென்றால் இவ்வழக்கில் இது வரை 349 பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் (இழப்பீட்டு தொகை சுமார் 74 கோடியே 71 லட்சம்) மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். மேற்படி நிறுவனங்களின் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் கண்டறியப்பட்டு தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கின் குற்றவாளிகள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான 752 வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை சுமார் ரூ. 15 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள புகார் மனுதாரர்கள் தபால், இமெயில் மூலமாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். முகவரி: காவல் துணைக் கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, 4/425-A, சங்கரபாண்டியன் நகர் முதல் தளம், தபால் தந்தி நகர் விரிவாக்கம், மதுரை- 625017 தொலைபேசி எண்: 0452-2562626 இமெயில்: eowmadurai2@gmail.com.

இதற்கு முன்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இரண்டு மனு மேளாக்களில் குறைந்தபட்ச மனுக்களே பெறப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற மனு மேளாவில் 117 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களிலிருந்து நேரில் வந்து புகார் அளித்தனர். 23 நிறுவனங்கள் மீது ரூ. 17.25 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.