சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை, மதுரவாயல் போலீசார் நேற்று காலை, மதுரவாயல் பைபாஸ் சாலை, அடையாளம்பட்டு மேம்பாலம் கீழே கண்காணித்தபோது, அங்கு மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சேலத்தைச்சேர்ந்த தர்மராஜ் (21), போரூர் பிரமோத் (20), வளசரவாக்கம் அஷ்வின்ராஜ் (23) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 1.2 கிலோ கஞ்சா மற்றும் 2 எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, வண்ணாரப்பேட்டை, மதுவிலக்கு அமலாக்கப்பிவு போலீசார் நேற்று (20.03.2024) காலை, கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் K.N.S. டிப்போ ஆட்டோ ஸ்டாண்டு அருகில் கண்காணித்து, அங்கு சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த ரீனா பெகரா (31) என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.03.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.