தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாம்” நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்தள்ளது.

அதன்படி வருகின்ற 08.07.2023 அன்று சனிக்கிழமை, வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்கள் மெகா குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெறுகிறார். இதே போல 08.07.2023 அன்று சனிக்கிழமை சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு,

திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், தி.நகர் மற்றும் புனித தோமையர் மலை ஆகிய 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில் பொதுமக்கள் மெகா குறை தீர் முகாம் நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெறவுள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மெகா குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.