சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் விரைவு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசராவ் (54). கடந்த 12.04.2012 அன்று தனது நண்பரான மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) தங்கபாண்டி (வயது 40) என்பவருடன் சேர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது, சீனிவாச ராவ், வெங்கடேஷிடம் கடனாக கொடுத்த ரூ. 10 ஆயிரம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சீனிவாசராவை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். இது குறித்து தங்கும் விடுதியின் மேலாளர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வெங்கடேஷை
கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கு தொடர்பாக, வடக்கு கடற்கரை, சிங்காரவேலன் மாளிகையில் உள்ள 16வது கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (26.07.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.
எதிரி வெங்கடேஷ் (எ) தங்கபாண்டி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி வெங்கடேஷ் (எ) தங்கபாண்டிக்கு, ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.