வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்: கோட்டூர்புரம் போலீசார் அதிரடி

164

சென்னை, கோட்டூர்புரம், அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பால்ராஜ், 22. கடந்த 09.12.2012 அன்று கோட்டூர்புரம், வாட்டர் டேங்க், முருகன் கோயில் பின்புறம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக முரளி, விவேக், தினேஷ் மற்றும் அரவிந்த் ஆகிய 4 நபர்களும் சேர்ந்து மேற்படி பால்ராஜை கிரிக்கெட் மட்டை மற்றும் ஸ்டெம்பால் தாக்கி கொலை செய்தனர்.

இது தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்து, மேற்படி 4 குற்றவாளிகளும், கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (23.08.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிரிகள் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முரளி, -21, விவேக், -21, தினேஷ், 21 ஆகிய மூவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்படி வழக்கில் அரவிந்த் என்பவர் ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவாக உள்ளதால், அவர் மீது நீதிமன்ற பிடியாணை (NBW) பிறப்பிக்கப்பட்டு, காவல்குழுவினர் எதிரி அரவிந்தை தேடி வருகின்றனர். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.