கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கர்னாடக மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் கர்னாடகா மாநிலம் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கர்னாடகாவில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமையும். கர்னாடகாவை இந்தியாவிலே நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல் இது. இம்மாநிலம், நம்பர் 1 ஆக இரட்டை என்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியமானது. விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அதேபோல், அவர்களது ஆட்சி காலத்தில் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. காங்கிரஸ் ஆட்சியை விட பாரதீய ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கர்னாடக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. இரட்டை என்ஜின் அரசாங்கம் என்றால் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுவது என்று அர்த்தம். ஏழைகளின் போராட்டத்தையும், வலியையும் காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. நாட்டை பிளவுபடுத்தி வருகிறது காங்கிரஸ். முடி க்கப்படாமல் இருந்த பல்வேறு நீர்பாசன திட்டங்களை எங்கள் ஆட்சியில் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.