ஐபிஎல் கிரிக்கெட்: 3 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

142

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இடம் பெறவில்லை. சென்னை அணியில் மிட்செல் சான்ட்னெர், பிரிட்டோரியஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, தீக்‌ஷனா சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். 2-வது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்த ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து தேவ்தத் படிக்கல் வந்தார். அவரும், பட்லரும் அணியை சரிவில் இருந்து மீட்டு சீரான வேகத்தில் ஸ்கோரை நகர்த்தினர். இருவரும் இணைந்து தீக்‌ஷனாவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினர். மொயீன் அலியின் பந்து வீச்சில் பட்லர் இரு சிக்சர் விளாசினார். அணியின் ஸ்கோர் 88-ஐ எட்டிய போது (8.3 ஓவர்) தேவ்தத் படிக்கல் 38 ரன்களில் (26 பந்து, 5 பவுண்டரி) ஜடேஜா வீசிய பந்தை தூக்கியடித்து பிடிபட்டார். அவரைத் தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் (0) அதே ஓவரில் கிளீன் போல்டாகி அதிர்ச்சிக்குள்ளானார். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் ராஜஸ்தானின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. 9 முதல் 13-வது ஓவர் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை.

4-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லருடன், இணைந்து ஆடிய ஆர். அஸ்வின் 10 ரன்னில் ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் ஆகாஷ் சிங் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை விரட்டினார். அதே ஓவரில் அஸ்வின் (30 ரன், 22 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச்சும் ஆனார். இன்னொரு பக்கம் பொறுமையாக ஆடிய பட்லர் நடப்பு தொடரில் 3-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 52 ரன்களில் (36 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) மொயீன் அலியின் சுழலில் சிக்கினார். முன்னதாக பட்லர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அதிரடி காட்டி அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார். இதற்கிடையே துருவ் ஜூரெல் (4 ரன்), ஜாசன் ேஹால்டர் (0), ஆடம் ஜம்பா (0) வெளியேறினர்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹெட்மயர் 30 ரன்களுடன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை தரப்பில் ஆகாஷ் சிங், துஷர் பாண்டே, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 176 ரன் இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (8 ரன்) ஏமாற்றம் அளித்தார். 2-வது விக்கெட்டுக்கு டிவான் கான்வேவும், அஜிங்யா ரஹானேவும் இணைந்து நேர்த்தியாக மட்டையை சுழற்றினர். நம்பிக்கை தந்த இந்த ஜோடி ஸ்கோர் 78 ஆக (9.3 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தது. ரஹானே 31 ரன்களில் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் (8 ரன்) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தப்பட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. டி.ஆர்.எஸ்.-ன்படி அவர் அப்பீல் செய்திருந்தால் தப்பியிருப்பார்.

இதைத் தொடர்ந்து அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் இருவரும் சுழல் ஜாலத்தில் சென்னை பேட்ஸ்மேன்களை மிரட்டினர். களத்தில் பந்து அதிகமாக எழும்பவே இல்லை. இவர்களது பந்து வீச்சில் திணறியதால் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. மொயீன் அலி (7 ரன்), மாற்று ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு (1 ரன்), டிவான் கான்வே (50 ரன், 38 பந்து, 6 பவுண்டரி) வரிசையாக சுழற்பந்துக்கு இரையானார்கள்.

இந்த சிக்கலான சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும், கேப்டன் டோனியும் கூட்டணி அமைத்தனர். ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சில் டோனி, சிக்சர், பவுண்டரி அடித்து குழுமியிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 19-வது ஓவரில் ஜாசன் ஹோல்டரின் பந்து வீச்சில் ஜடேஜா ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அசத்தினார்.

பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசினார். இதில் முதல் இரு பந்துகளை வைடாக வீசினார். மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில் ரன் இல்லை. 2-வது மற்றும் 3-வது பந்துகளை டோனி சிக்சருக்கு பறக்கவிட்டு அரங்கை அதிர வைத்தார். 4-வது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவையாக இருந்தது. டோனி மீண்டும் சிக்சர் அடிப்பாரா? என்று ரசிகர்கள் பதற்றதோடு உற்றுநோக்கினர். ஆனால் யார்க்கராக வந்த கடைசி பந்தில் டோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டோனி 32 ரன்களுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), ஜடேஜா 25 ரன்களுடனும் (15 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.