சட்டசபைக்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

161

கொரோனா பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது என குற்றஞ்சாட்டி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர்.

எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று சட்டசபைக்கு வந்த அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். நேற்றைய சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அவரின் இந்த பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என அண்ணா தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி இன்று சட்டசபையில் பேசினார்.

அப்போது அவர் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் (நேரடி ஒளிபரப்பு) காட்டப்படுவதில்லை என்றார். இதற்கு சபாநாயகர், ‘இது தொடர்பாக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார், நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன்’ என்றார். அதனை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதன் பின்னர் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.