சென்னை ஆவடியில் சிறுவனின் கல்விக்கு உதவிய இன்ஸ்பெக்டரை கமிஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறுவனையும் வாழ்த்தினார்.
சென்னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஹரிஸ் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தான். இதனால் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் காவல்துறை உதவியை நாடினான். பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு தனது பள்ளி படிப்பை தொடர உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சிறுவனை ஆவடி சின்ன அம்மன் கோவில் அருகில் உள்ள நபி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்த்துள்ளார். நன்கொடையாளர்கள் உதவியுடன் சிறுவனுக்கு சீருடைகள் மற்றும் பள்ளி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து உதவிகளை செய்தார்.
இது குறித்து தகவல் தெரியவந்ததும் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியையும் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் சிறுவனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து நன்றாக படிக்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.