சேலம் வாழப்பாடியில் ரூ. 1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

146

தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், தேவையை பெருமளவில் தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை அமலாக்கபிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் விஜயவாடா பகுதியிலிருந்து துல்லியமான தகவல்கள் இது தொடர்பாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று 12.04.2023 தேதி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் மதுரை, விழுப்புரம் மற்றும் சேலம் மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் அவர்கள் குழுவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு சேலம் மற்றும் அவர் குழுவுடன் சேலம் மாவட்டம், வாழப்பாடி, மேட்டுப்பட்டி சோதனை சாவடி அருகில் வெள்ளை நிறம் கொண்ட பார்ச்சூணர் கார் பதிவு எண். TN 21 AP 5050 வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் அதன் உள்ளே 200 கிலோ கொண்ட கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டுள்ள வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவான எதிரிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறை க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், எஸ்பி ஜெயந்தி தலைமையில் நடத்தப்பட்ட இச்சோதனையில் ரூபாய். 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வருடம் 1779 கிலோ கஞ்சா மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி கஞ்சா பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை 10581 அல்லது 94984 10581 தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்கும்படி அமலாக்கத்துறை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.