நெதர்லாந்து டாக்டர் என கூறி பெண்ணிடம் ரூ. 4.5 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் இருவருக்கு 5 ஆண்டு ஜெயில்

167

மேட்ரிமோனி இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் ரூ. 4.5 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘நான் திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது நெதர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். பின்பு எனக்கு கிப்ட் பார்சல் ஒன்றை அனுப்பினார். அதன்பிறகு மும்பையிலிருந்து ஒரு பெண் என்னை தொடர்பு கொண்டு அந்த பார்சலை பெற்றுக்கொள்வதற்காக பதிவு கட்டணம் ரூ. 28,000- செலுத்துமாறு சொன்னார். அதன்படி அவரிடம் எனது வங்கிக் கணக்கை கொடுத்தேன். அதை நம்பி அதில் பணம் செலுத்தினேன். மீண்டும் அந்த பெண் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அதற்குள் ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் கரன்சி நோட்டுகள் இருப்பதாகவும் அதற்கு அபராதத் தொகை ரூ. 77,000 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் சொன்னார். அதையும் நான் அந்த வங்கிக் கணக்கில் செலுத்தினேன்.

மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு யூரோவை பணமாக மாற்றுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட சொன்னார். அதையும் அந்த பெண்மணி சொன்ன வங்கி கணக்கில் செலுத்தினேன். மேலும் அந்தப் பெண் என்னை மீண்டும் தொடர்பு கொண்டு வங்கி கணக்கை அப்கிரேடு செய்வதற்கு ரூ. 95,000 செலுத்தச் சொன்னார். -இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நான் பணம் செலுத்த மறுத்தேன். இந்நிலையில் டாக்டர் சலீம் என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அவரது சகோதரர் என்று கூறி ஆசிப் என்பவர் என்னிடம் பேசி மிரட்டினார். பணம் செலுத்தவில்லை என்றால் சட்ட ரீதியான பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன நான் மேற்கொண்டு ரூ. 40 ஆயிரம்- மற்றும் ரூ. 55 ஆயிரத்தை அவர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தினேன். அதன்பிறகு டாக்டர் சலீம் அவரை தொடர்பு கொண்டு காலதாமதமாக பணம் செலுத்தியதால் தாமதக் கட்டணம் ரூ. 20,000- கட்ட வேண்டும் என்று சொன்னார். அதையும் நம்பி மேற்படி வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், மறுநாள் டாக்டர் சலீம் அவரை தொடர்பு கொண்டு அவருடைய நண்பர் மேற்படி பார்சலை டெலிவரி செய்ய இந்தியா வந்திருப்பதாகவும், ஓவர்டியூ ஆகிவிட்டதால் மேற்படி பார்சலுக்காக லேட்பீஸ் செலுத்த வேண்டியுள்ளதால் மேலும் ரூ. 50,000 கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக ஆர்.பி.ஐ-யில் இருந்து மெயில் வந்திருப்பதாகவும் அதை பார்க்கும்படியும் கூறினார்.

மனுதாரர் அதை பார்த்துவிட்டு போலியாக உள்ளதாக கூறினார். மேலும் அதற்கு அவர் பணம் கட்டினால்தான் இந்தியா வருவேன் என்றும் விமான பயணத்திற்கு கட்டணம் செலுத்துமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் பணம் கட்ட முடியாது என்று மறுத்தேன். அவர் பேசிய வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்து விட்டேன். அதன் பின்னர் அந்த நபர் என்னைத் தொடர்பு கொண்டு நகைக்கடன் வாங்கியாவது பணம் கட்டுமாறு கெஞ்சினார். இதனால் பயந்து போன நான் நகைகளை அடமானம் வைத்து மீண்டும் பணம் அனுப்பினேன்.

அதன்பிறகு ஜூலை மாதம் 17ம் தேதி அந்த நபர் இந்தியா வருவதாக தெரிவித்தார். அதன்பிறகு ஒரு பெண்மணி தொடர்பு கொண்டு டாக்டர் சலீம் புதுடில்லி விமான நிலையத்திற்கு வந்து விட்டதாகவும் அவர் இந்தியாவில் நுழைவதற்கு பிஐஓ கார்டு இல்லை என்றும் அதற்காக ரூ. 1,35,000- பணம் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் சலீம் என்பவர் விமான நிலைய கஷ்டடியில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு அவருடைய லொக்கேஷனை அவர் அனுப்புமாறு கேட்டதற்கு அவரது எண்ணை பிளாக் செய்து விட்டார். மேற்படி நபர்கள் என்னை திட்டமிட்டு ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக சென்னை, மத்தியக் குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்கு பதிவு செய்து போலீசார் புலன் விசாரணை நடத்தினர். இதில் டில்லியில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்து சென்று புதுடில்லி, உத்தம் நகரில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்நந்த பாலினஸ் சிகேலுவோ (வயது 31), சிலிட்டஸ் இகேசுக்வு (வயது 23) ஆகியோரை 31.08.2021ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய மொபைல் போன்கள், லேப்டாப்கள், வங்கி கணக்கு அட்டைகள் மற்றும் பணம் ரூ. 4,30,000- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 03.09.2021 அன்று குற்றவாளிகள் கனம் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எழும்பூர்) ஆஜர்படுத்தப்பட்டனர்.

புலன் விசாரணையில் மேற்படி நைஜீரிய நபர்கள் புதுடில்லியில் தங்கியிருந்து கொண்டு பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள மற்றவர்களின் புகைப்படங்கள், தகவல்களை எடுத்து மேட்ரிமோனி இணைய தளங்களில் போலியான பெயர்களில் பதிவு செய்துள்ளனர். திருமணத்திற்காக இணையதளம் மூலம் அணுகும் பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த மேல்தட்டு / பணக்கார மணமகன் என்று நம்ப வைப்பதற்காக வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பார்சலை அனுப்பி வைப்பதாக ஆசை காட்டி நம்ப வைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச்சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவது தெரியவந்தது.

இவ்வழக்கு விரைவாக விசாரணை செய்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூர், தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்து வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (13.04.2023) நீதிபதி கோதண்டராஜ் மேற்படி நைஜீரியன் எதிரிகள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.