சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

210

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்டிக்கடைகளில் அதிர்ச்சி சோதனை நடத்தி அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பதுக்கி விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது வழக்குகள் பாய்ந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று 01.09.2023 நள்ளிரவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் காவல் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் இரவு ரோந்து மேற்கொண்டார்.

இரவு ரோந்தில் சாலையோர உணவகங்களில் இருந்த நபர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருக்கின்றதா என சோதனை மேற்கொண்டார். இரவில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகின்றதா என்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் காவலர்களின் இரவு ரோந்து, வாகன சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர், அம்பத்தூர் ,செங்குன்றம், மாதவரம் பால் பண்ணை, மணலி, சாத்தான்காடு, எண்ணூர், ஆகிய பகுதிகளில் விடிய விடிய இந்த இரவு ரோந்தை கமிஷனர் சங்கர் நேரடியாக மேற்கொண்டதால் ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.