ஐஎப்எஸ் அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி: கேரளா பலே கில்லாடிகள் மூவர் கைது: சென்னை CCB சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை
ஐஎப்எஸ் அதிகாரியிடம் பங்குவர்த்தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேரளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசாமிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முகமது பர்விஸ் ஸ்ரீஜித் ஆர் நாயர் அப்துல் சாலு
சென்னையில் வசிக்கும் ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர் அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயலிகளில் சேருமாறு வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியைப் பார்த்து இரண்டு வாட்ஸ்ஆப் குழுக்களில் சேர்ந்துள்ளார். மோசடி நபர்கள் அனுப்பிய இணைப்பு மூலம் ஆன்லைனில் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் மோசடி நபர்கள் வர்த்தக செயலி மூலம் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய சொல்லி துாண்டியுள்ளனர். அதை நம்பிய ஐஎப்எஸ் அதிகாரி பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்து 6 கோடியே 58 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் மாயமாகி விட்டனர். அதன் பின்னர்தான் அது மோசடி செயலி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரி கடந்த பிப்வரி மாதம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். மோசடி செய்பவர்களின் பணப்பழக்கத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரளா, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலபுரம் மாவட்டங்களில் வசித்த ஸ்ரீஜித் ஆர் நாயர் (47), அப்துல் சாலு (47), முகமது பர்விஸ் (44) ஆகிய நபர்கள் இந்த ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா தலைமையிலான தனிப்படையினர் கேரளா விரைந்து சென்று மேற்கண்ட மூவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு குற்றச் செயல்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின.
பொதுமக்களிடம் மோசடி மூலம் பெறப்படும் பணம் ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு BINANCE வர்த்தக மொபைல் செயலி மூலம் USDT கிரிப்டோ கரண்சியாக இந்தியாவுக்கு திரும்ப வருவதை போலீசார் அடையாளம் கண்டனர். இவ்வளவு நாட்களாக மோசடி செய்பவர்கள் சிக்கிக் கொள்ளாமல் பணப்புழக்கத்தை மறைக்க இவ்வாறு செய்து வந்ததும் தெரியவந்தது. கைதான மூவரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.