பிற மாவட்ட ரவுடிகள் சென்னைக்குள் நுழைந்தால் செயலி மூலம் தெரிந்து விடும்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா
சென்னையில் பழிக்குப்பழியாக நடந்து வரும் ரவுடிகள் கொலைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாளப்பட்டு வருகிறது குறித்து சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கி உள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் பழிக்குப்பழியாக ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது போல எழும்பூரில் ரவுடி சத்யா கொல்லப்பட்டார். இதுவும் பழிக்குப்பழியாக கொலை நடந்துள்ளது. இதுபோல நொளம்பூர் பகுதியில் அமமுக பிரமுகர் ஜெகன் கொலை சம்பவமும் பழிக்குப்பழியாக நடந்தது.
இது போல சென்னையில் பழிக்குப்பழியாக கொலை சம்பவங்கள் தொடர்வதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது? பழிக்குப்பழியாக நடந்து வரும் கொலை சம்பவங்களை காவல்துறை தடுக்க தவறி உள்ளதா? என்ற கேள்விகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா முன் செய்தியாளர்கள் வைத்தனர்.
அப்போது அவர் கூறியதாவது, ‘‘ட்ராக் கேடி செயலி தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் ரவுடிகள் குறித்து App-ல் டிஜிட்டல் பதிவு செய்து வைத்துள்ளோம். ரவுடிகள் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிற மாவட்ட ரவுடிகள் சென்னைக்குள் பிடிபட்டாலும் சுலபமாக அந்த ரவுடி குறித்த விவரங்களை ட்ராக் கேடி App மூலம் கண்டுபிடித்து விடலாம்.
சென்னையில் 3,500 ரவுடிகள் உள்ளனர். சிறையில் இருந்து வெளியே ரவுடிகள் வந்தால் App-ல் அலர்ட் சிஸ்டம் வைத்துள்ளோம். இதன் மூலமாக ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகள் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது” என்று சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.