ரூ. 4,620 கோடி ஹிஜாவு நிதி நிறுவன மோசடியில் கணவன் மனைவி கேரளாவில் கைது: EOW எஸ்பி ஜோஷ் தங்கையா தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கை
ரூ. 4620 ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்புடைய கணவன் மனைவியை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் கேரளாவில் வைத்து கைது செய்தனர்.
எஸ்பி ஜோஷ் தங்கையா
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ. 4,620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனத்தின் தலைவர் சவுந்திரராஜன், அவரது மகன் நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் மற்றும் 12 இயக்குநர்கள், 8 போர்டு மெம்பர்கள், 13 கமிட்டி மெம்பர்கள் சேர்ந்து பொது மக்களிடமிருந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022 அக்டோபர் மாதம் வரை டெபாசிட் தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டித்தொகை அளிப்பதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததின் பெயரில் கடந்த 15.11.2022 அன்று பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடம், சென்னையில் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி தொடர்பாக நிறுவனத்தின் போர்டு மெம்பர்கள், கமிட்டி மெம்பர்கள் மற்றும் டைரக்டர்கள் உட்பட 20 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று ஹிஜாவு நிறுவனம் மோசடி செய்துள்ளனர். 16,500 நபர்கள் இதுவரை புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் 40 பேர் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற ஹிஜாவு நிறுவன நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் சவுந்திரராஜனை இண்டர்போல் உதவியுடன் கைது செய்வதற்கு கடந்த மாதம் பிப்ரவரி மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனனர்.
இந்த மெகா மோசடி குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாகதேவி உத்தரவின் பேரில், ஐஜி சத்தியப்ரியா, எஸ்பி ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹிஜாவு நிதிநிறுவன மோசடி வழக்கில் கேரளாவில் தலைமறைவாக இருந்த கமிட்டி உறுப்பினர்கள் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரீஜா (-46) மற்றும் அவரது கணவர் மதுசூதனன் (53) ஆகியோர் நேற்று முன்தினம் (17.03.2024) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது, ”பிரிஜா மற்றும் அவரது கணவர் மதுசூதனன் இருவரும் சேர்ந்து சுமார் 2,500 முதலீட்டார்களிடம் இருந்து சுமார் 90 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளனர். இதற்காக சென்னை ஷெனாய் நகரில் “APM அக்ரோ” என்ற பெயரில் ஹிஜாவ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தினை தொடங்கி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தலை மறைவாக இருந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.