பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் கமிஷனர் அருண்
21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot Spring என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில், இந்தியாவின் 10 மத்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதனையொட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 213 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக இன்று 21.10.2024 ம் தேதி காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தியா முழுவதும் பணியின்போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குறித்து நினைவு கூர்ந்தார். தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண், தமிழக காவல்துறை உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள், மற்றும் காவல் ஆளிநர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்த காவல் அதிகார்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.