7 நாட்களில் 35 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

169

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.01.2023 முதல் 08.11.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 386 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 86 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 71 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 12 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 3 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 565 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 02.11.2023 முதல் 08.11.2023 வரையிலான ஒரு வாரத்தில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். வழிப்பறி குற்றத்திற்காக சென்னை திருவிக நகரைச் சேர்ந்த குற்றவாளிகள் ராசாத்தி (எ) இளம்பரிதி, 40 என்பவர் மீது புளியந்தோப்பு காவல் நிலையத்திலும், செங்குன்றத்தைச் சேர்ந்த சிவா (எ) சிவாஜி, 29, என்பவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அருண்குமார், 29 என்பவர் மீது மெரினா காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதே போல தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் உதயசங்கர், மாதவரம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ், விஜய், 24 ஆகியோர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் கைதாகி சிறை சென்றுள்ளனர். இவர்கள் உள்பட 35 பேர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தனர். அதனை பரிசீலனை செய்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 35 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.