7 நாளில் 12 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

167
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல்  26.02.2024 வரை சென்னை பெருநகரில்  கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 57 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 25 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 28 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 14 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 3 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 3 குற்றவாளிகள், பெண்களை மானபங்கப்படுத்திய 1 குற்றவாளி  மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம்  134 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 20.02.2024 முதல் 26.02.2024 வரையிலான 7 நாட்களில், 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் புழல் ரமேஷ் (23) என்பவர் கடந்த 24.01.2024 அன்று சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், புரசைவாக்கம் ஈஸ்வர் (22), ஜனார்த் (எ) ஜப்பான் (25), அரவிந்த் (எ) வெட்டுக்கிளி (24) ஆகிய 3 நபர்களும் சேர்ந்து கடந்த 07.02.2024 அன்று வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் திருவல்லிக்கேணி பிரசாந்த் (32) கடந்த 21.01.2024 அன்று, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திலும், மயிலாப்பூர் ஸ்ரீதர் (33) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மயிலாப்பூர் காவல் நிலையத்திலும், கொளப்பாக்கம் ஓம்பிரகாஷ் (36), நெசப்பாக்கம் வினோத்கண்ணன் (34)  ஆகிய இருவரும் கடந்த 30.01.2024 அன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும், புழல் பொன்ராஜ் (32), பொன்ராஜ் (43) கொடுங்கையூர் ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக குற்றத்திற்காக கொடுங்கையூர் காவல் நிலையத்திலும், ஹேமகுமார் (61) என்பவர் நில மோசடி செய்த குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவிலும், ராமமூர்த்தி (35) சென்னை என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதற்காக விபச்சார தடுப்புப்பிரிவிலும்  வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்படி குற்றவாளிகள் ரமேஷ் என்பவரை கடந்த 20.02.2024 அன்றும், ஈஸ்வர், ஜெனார்த் (எ) ஜப்பான், அரவிந்த் (எ) வெட்டுக்கிளி ஆகிய 3 நபர்களை 21.02.2024 அன்றும், பிரசாந்த், ஸ்ரீதர், ஓம்பிரகாஷ், வினோத்கண்ணன், பொன்ராஜ், பொன்ராஜ், ஹேமகுமார் ஆகிய 7 நபர்களை 24.02.2024 அன்றும், ராமமூர்த்தி என்பவரை நேற்றும் (26.02.2024) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 12 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.