26 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

127

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2024 முதல் 24.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 13 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 60 குற்றவாளிகள் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2024 முதல் 24.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 26 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அந்தந்த காவல் ஆய்வாளர்கள், துணைக்கமிஷனர்கள் மூலமாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரைத்தனர். அதனை ஆய்வு செய்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 26 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நயன் பக்டி (வயது 28) என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, பூக்கடை காவல் நிலையத்திலும், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து (எ) மாரி (எ) ஆலிகுடி மாரி (37) என்பவர் 05.09.2023 அன்று ஜெகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நொளம்பூர் காவல் நிலையத்திலும், சென்னை வடபழனியைச் சேர்ந்த அகஸ்டின் (எ) கான்டு (29) என்பவர் கடந்த 22.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் (PEW/AnnaNagar) வழக்குகள் பதிவு செய்து,

கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் புளியந்தோப்பைச் சேர்ந்த கஞ்சாமணி (எ) தீனதயாளன் (24) கடந்த 29.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக புளியந்தோப்பு காவல் நிலையத்திலும், மியா (எ) ஆனந்தவள்ளி, -25 என்பவர் கடந்த 30.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் எம்ஜிஆர் நகர் சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன், (வயது 28), டேவிட் (எ) டோலாக், (28) ஆகிய இருவரும் கடந்த 31.12.2023 அன்று அஜய் என்ற சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்திலும், கள்ளுக்குட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (23) என்பவர் கடந்த 16.12.2023 அன்று சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும் செனாய் நகர் திருமுருகன் (எ) கூனி முருகன், 35 என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக எழும்பூர் காவல் நிலையத்திலும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் (37) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மற்றும் போதை பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்கண்ட இவர்கள் உள்பட 26 பேரும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.