ஒரே வாரத்தில் 20 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

160

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 31.12.2023 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 460 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 121 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 104 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள்,பாலியல் தொழில் நடத்திய 15 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 5 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள், மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 2 குற்றவாளிகள் என மொத்தம் 714 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28.12.2023 முதல் 03.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 20 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.