தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, மாசாப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் பகுதியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற ராணுவ வீரர் கடந்த 17.10.2023 அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் (எ) நரிகவுண்டர் மகன் மாரிச்சாமி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போல் கடந்த 21.10.2023 அன்று புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுகநேரி அலெக்ஸ்ரூபன் (19), முத்துகிருஷ்ணாபுரம் முத்துராஜ் (22) மற்றும் ஆறுமுகநேரி பாரதிநகர் பாலமுருகன் (20) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரை செய்தார். அதே போல மாசாப்பட்டி கொலை வழக்கு குற்றவாளி மாரிச்சாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த ஆட்சியர் டாக்டர் கோ. லட்சுமிபதி மாரிச்சாமி, அலெக்ஸ் ரூபன், முத்துராஜ், பாலமுருகன் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 எதிரிகள் உட்பட மொத்தம் 154 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.