தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் ரவுடி கும்பல் கைது: எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து மாமூல் வசூலிக்கும் நபர்களை எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி தலைமையிலான போலீசார் நேற்று (19.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முடிவைத்தானேந்தல், கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாடசாமி (28), யாதவர் தெருவைச் சேர்ந்த முத்துமாலை (24), தூத்துக்குடி அண்ணாநகர் மகாகிருஷ்ணன் (எ) மந்திரி (26), திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பொன்முத்துராம் (21), மேலதட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி (20) மற்றும் புதுக்கோட்டை வர்த்தகரெட்டிபட்டியைச் சேர்ந்த சிவகுருநாதன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மாடசாமி, முத்துமாலை, மகாகிருஷ்ணன் (எ) மந்திரி, பொன்முத்துராம், ராஜபாண்டி மற்றும் சிவகுருநாதன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.