நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியக்கம் சார்பில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஜாஸ்மின் கலீல் ரகுமான் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியக்கதின் தலைவர் செய்யது மீரான் முஜ்ஜமில், மொய்தீன் பள்ளியின் செயலாளர் பாரூக், பொருளாளர் மொகிதீன் அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், என்.எல்.சி. நிறுவன அதிகாரிகள் சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அப்துல் ரசாக் பங்கேற்றார்.
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் ஸ்ரீஜா, பிரீத்தா குழுவினர் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 489 பயனாளிகள் முகாமில் பங்கேற்றனர். இவர்களில் 210 பேருக்கு இலவச கண்ணாடியும் 55 பேருக்கு சொட்டு மருந்தும் வழங்கப்பட்டன. மேலும் இலவச அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட 9 பேரும் நெல்லை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காயல் ஜெஸ்முதீன் தலைமையிலான காயல் முகம்மது சமீம், பள்ளி பொறுப்பாளர் அபூபக்கர், சேக் தாவூது, செய்யது உமர், இறையருள் யூசுப் சாகிப், அப்துர் ரகுமான், சிராஜுதீன், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி குழுவினர் செய்திருந்தனர்.