அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 70 லட்சம் ஏப்பம்: தடய அறிவியல் துறை உதவியாளர் சிறையில் அடைப்பு: சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விஜி என்பவர் அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூர கல்வி மையம் நடத்தி வருகிறார். சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் விஜிக்கு அறிமுகமாகியுள்ளார். தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது என செல்வராஜ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அவர் விஜியின் கல்வி மையத்தில் படிக்கும் 26 மாணவர்களுக்கு இந்து சமயஅறநிலையத்துறை, பத்திரப்பதிவுத்துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 75 லட்சம் பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். அது தொடர்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விஜி புகார் அளித்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர் செல்வராஜ் நேரடி மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் செல்வராஜ் தற்போது விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராக வேலை செய்து வருவதும், இவர் இந்து சமய அறநிலையத்துறை, பத்திர பதிவுத்துறை, TNPSC மற்றும் இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக கூறி புகார்தாரரிடம் ரூ.75 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டது உண்மை என விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு தனிப்படையினர் தலைமறைவாக இருந்த சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த செல்வராஜை 16.04.2025 அன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜ் என்பவரிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து எவரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.