பள்ளிகளில் சிற்றுண்டிவிரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

114

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் 2023 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.