இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெருநகர காவல் துறை நடத்தும் குதிரையேற்ற போட்டிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.
சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் வில்லியம் லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.
சென்னை பெருநகர காவல் துறை, குதிரைப்படைபிரிவை மேம்படுத்தவும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல் குதிரையேற்ற போட்டியை (First Greater Chennai Police Equestrian Championship-2024) வருகின்ற 23.02.2024 முதல் 25.02.2024 வரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (13.02.2024) தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச்செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற போட்டி ஏற்பாடுகளுக்காக சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் வழங்கினார்.