பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ. 6.50 மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் டத்தோ ராமசுரயே (வயது 58). இவர் காஞ்சிபுரத்தை பூர்விகமாகக் கொண்டு மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர். மலேசியாவில் மொத்தமாக துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் டத்தோவுக்கு கடந்த 2019ம் ஆண்டு சென்னை கோவில்பதாகையைச் சேர்ந்த மேனகா என்ற பெண் மலேசியாவில் துணிவியாபாரம் செய்து வருவதாக சொல்லி அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய மேனகா பின்னர் தனது உறவினர் சக்திவேல் (எ) ஸ்ரீகாந்த் என்பவரை டத்தோவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சக்திவேல் பெரிய Project செய்து வருவதாகவும் அதற்கு பல நபர்கள் முதலீடு செய்ததாகவும் 15 மாதத்தில் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக வழங்குவதாகவும் டத்தோ ராமசுரயேவிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய டத்தோ ராமசுரயே சென்னை வந்து மேனகா மற்றும் ஸ்ரீகாந்த் காட்டிய Project வேலை நடைபெறும் இடம் சென்று பார்த்து வந்துள்ளார். அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீகாந்தின் புராஜக்ட்டில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதற்கு 3 மாத இடைவெளியில் ரூ. 4,50,000 வீதம் லாபத் தொகையாக மேனகா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் வழங்கியுள்ளனர். மீண்டும் அந்த பணத்தை அவர்களிடமே டத்தோ முதலீடு செய்துள்ளார். இவ்வாறாக மேனகா மற்றும் ஸ்ரீகாந்திடம் டத்தோ ரூ. 80 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதுபோன்று பல தவணைகளாக டத்தோ ரூ. 6 கோடியே 50 லட்சம் வரை ஸ்ரீகாந்திடம் கொடுத்துள்ளார். இச்சூழலில் 2019ம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் டத்தோவால் இந்தியாவுக்கு வர இயலவில்லை. 2021ம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்து விசாரித்த போது மேனகா மற்றும் சக்திவேல் (எ) ஸ்ரீகாந்த் ஆகியோர் பணத்துடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
இது குறித்து டத்தோ ராமசுரயே ஆவடி கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மைனர்சாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து முக்கிய குற்றவாளி ஸ்ரீகாந்த்தை போலீசார் கடந்த மாதம் 19ம் தேதியன்று கைது செய்தனர். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த மேனகா (வயது 46)வை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு தலைமறைவு எதிரிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மைனர்சாமி குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.