ப்ரீத் அனலைசர் கருவி குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு விளக்கமும்- அறிவுறுத்தலும் தெரிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை நடத்தினர். அப்போது அவர் மது அருந்தியிருப்பதாக போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் அந்த வாலிபர் தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும் தான் குடிக்கவில்லை எனவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அது தொடர்பாக சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, ‘‘சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டுவர்களை Breath Analyser என்னும் சுவாசம் அறியும் கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்தச் சோதனையின்போது இக்கருவியில் 30mg / 100ml க்கு மேல் அளவீடு காண்பிக்கும் வாகன ஓட்டிகள் மீது மதுபோதையில் வாகனம் ஒட்டியது தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாமாக விபத்து ஏற்படுத்திக் கொள்ளாமலும், மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திடாமலும், தடுக்கப்பட்டு மனித உயிர்களும் உடல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.30 mg/ 100ml என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை. ஆகவே காவல்துறையின் சோதனையின்போது வாகன ஓட்டிகளுக்கு 30 mg / 100 mlக்கு மேற்பட்ட அளவீடு காண்பித்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு முறை இக்கருவியின் மூலம் பரிசோதனை செய்ய கேட்டுக் கொண்டால் காவல் குழுவினர் அந்த வாகன ஓட்டியை மீண்டும் Breath analyser கருவி மூலம் சோதனை மேற்கொள்ள போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆகவே வாகன ஓட்டிகள் சந்தேகத்தின் பேரில் மீண்டும் சோதனை மேற்கோள்ள கேட்டுக் கொண்டால் மறுமுறையும் இக்கருவி மூலம் சோதனை செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது