சென்னை கேகே நகரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லை போட்டு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உணவு டெலிவரி பாயை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் முனிசாமி சாலையில் டி.பி.எஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெரிய கற்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை ஐதராபாத்தில் உள்ள சிசிடிவி மூலம் பார்த்துக் கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் சென்னை கே.கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ரோந்து போலீசார் ஏடிஎம் மையம் அருகே வந்த போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் கற்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் அந்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உணவு டெலிவரி செய்யும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அசோக் என்பதும் அவர் மது அருந்த பணம் இல்லாததால் கல்லால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க திட்டம் போட்டு அதனை உடைத்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அசோக் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் கல்லால் இயந்திரத்தை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.