சென்னை, கிண்டியில் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த மேலும் 4 நபர்களை போலீசார் கைது செய்து ரூ 11.55 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.



சென்னை, வேளச்சேரி, LIG, TNHB காலனி, எண்.1380 என்ற முகவரியில் வசித்து வருபவர் சோமசுந்தரம், வயது 55. தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 18.08.2023 அன்று காலை தனது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 15 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிண்டி, மடுவாங்கரை மசூதி காலனி 3வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த சில நபர்கள் சோமசுந்தரத்தை வழிமறித்து தகராறு செய்து தாக்கி அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சோமசுந்தரம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரசிக், 28 என்பவரை 20.08.2023 அன்றும் மணிகண்டன், 33, செந்தில்குமார், 42, திலீப் ஆனந்த், 31, தாமோதரன், 35, சித்திக் அலி, 44, நெல்லை கமது அலி, சையது அலி, 48 ஆகிய 6 நபர்களை 22.08.2023 அன்றும் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 9,00,000-, 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி இந்த கொள்ளையில் தொடர்புடைய சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஜெரி ஜோசப், 32, வெட்டுவாங்கேனி சூர்யபிரகாஷ் (எ) சூர்யா, 26, பள்ளிக்கரணை பில்லா என்கிற ரஞ்சித்குமார், 24, நீலாங்கரை சாய் கிருஷ்ணன் (எ) சண்முகம், 24 ஆகிய 4 நபர்களை நேற்று (23.08.2023) கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.2,55,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (23.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.