ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்காமல் மோசடி செய்ததாக பிரபல ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் “ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்” என்ற நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளன. சுற்றுலா செல்லும் பயணிகள் சென்று தங்குவதற்கு வசதியாக இங்கு சொகுசு விடுதிகள் வாடகைக்கு விடுகின்றனர். இந்நிலையில் சலுகைகள் வழங்குவதற்கு பணத்தை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு அவற்றை வழங்காமல் மோசடி செய்ததாக ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் பாதிப்படைந்த நபர் கூறியிருந்ததாவது, ”கடந்த 2019ம் ஆண்டு என்னை தொடர்பு கொண்டு, தாங்கள் ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்டில் உறுப்பினராக சேர்ந்தால் வருடம் 15 நாட்கள் வீதம் இந்தியா முழுவதும் உள்ள விடுதிகளில் 25 ஆண்டுகள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என்றும், வேறு சேவைக் கட்டணம் ஏதுமில்லை என்றும் கூறினர். அதனை நம்பிய நான் ரூ 7.5 லட்சம் பணத்தை செலுத்தி கடந்த 2019ம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தேன். ஆனால் 2020ஆம் ஆண்டு மட்டும் இலவச சேவையை வழங்கிவிட்டு, அதன் பின்பு ஏதாவது காரணம் சொல்லி, தொடர்ந்து சேவை வழங்காமல் ஒவ்வொரு வருடமும் ஏமாற்றி வந்தனர். கடந்த மார்ச் மாதம் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டனர். ஆகவே ஸ்டெர்லிங் ஹாலிடே நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் தயால் லால்வாணி, துணைத் தலைவர் சித்ரா மற்றும் இயக்குனர்கள் லதா ராமநாதன், மாதவன் மேனன், சுமித் மகேஸ்வரி, பர்வீர் குமார் வோரா ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.