25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் சென்னை பெருநகரம் முழுவதும் 56 இடங்களில் தீவிரவாகன சோதனைகள் நடைபெற்றன.
CCTV Camera-க்களை ஆய்வு செய்ததில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் என தெரியவந்தது. உடனே விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், அவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத்திற்கு செல்லும் விமானத்திற்கு இரண்டு நபர்கள் டிக்கெட் கேட்டதாகவும் அதில் ஒருநபர் டிக்கெட் வாங்கி சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டைசரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் தகவல் கிடைத்தது. ஐதராபாத் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமானக் கட்டுபாட்டு அறைக்கு உரிய முறையில் தகவல் அறிவித்து விமானம் நிறுத்தப்பட்டது. உடனே காவல் ஆய்வாளர் விமான நிலையம் அவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட குற்றவாளியை கைது செய்து விமானத்திற்கு வெளியே இறக்கி கொண்டுவந்தார்.
பின்னர் மற்றொரு நபர் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்த போது சென்னை விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்களை விசாரணை செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3வது நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பினாக்கி எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் ஐதராபாத்திற்கு செல்வதாக தெரியவந்தது.
உடனடியாக மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு இது குறித்து சரியான தகவல் கொடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்திற்குட்பட்ட ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து மத்திய இரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இது சம்பந்தமான புலன் விசாரணையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள், அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் சம்பந்தமாகவும், வடமாநில குற்றவாளிகள் ஏற்கனவே செய்து இருக்கும் குற்றங்களை குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஜாபர் குலாம் உசேன் இரானி, மிசாம மஜாதுஷ்மேசம் இரானி ஆகிய இருவரும் நிலையத்திலும் சல்மான் உசேன் இரானி என்பவர் ஓங்கோல் இரயில் நிலையத்திலும் கைது செய்யப்பட்டனர். இவர்களை மேலும் விசாரணை செய்ததில் மேற்கண்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த குற்ற சம்பவத்தில் அபகரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இக்குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மீட்பதற்காக தரமணி ரயில்வே நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் அழைத்து சென்ற போது குற்றவாளி ஜாபர் குலாம் உசேன் இரானி என்பவர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து ஏற்கனவே அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து காவல் அதிகாரிகளை நோக்கி சுட்டார்.
காவல் அதிகாரிகள் சுடவேண்டாம் என்று பலமுறை எச்சரித்த போதும் மீண்டும் சுட்டார். வேறு வழியின்றி தற்காப்பிற்காக சுட்டதில் மேற்படி நபர் காயம் அடைந்தார். உடனே காயம் அடைந்த நபரை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த நபரின் பிரேத உடலானது இராயப்பேட்டை அரசு மருத்துவமணை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.