மேற்கு மண்டல போலீஸ் ஐஜியாக பவானீஸ்வரி IPS., பதவியேற்பு

183

தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல்துறையில் மேற்கு மண்டல காவல்துறை கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 8 மாவட்டங்களும் ஐஜி மேற்பார்வையில் கோவை, சேலம் என இரண்டு சரக டிஐஜிக்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பவானீஸ்வரி இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐஜியாக இருந்தவர். சிபிசிஐடி எஸ்பி, சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர், திருச்சி சரக டிஐஜி, தமிழக கடலோர காவல் குழும டிஐஜி, சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்த பவானீஸ்வரியை தற்போது தமிழக காவல் மண்டலங்களின் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு மண்டலத்துக்கு பணியமர்த்தி அழகு பார்த்துள்ளது தமிழக அரசு.

பவானீஸ்வரி தமிழக காவல்துறையில் நேர்மையான, கண்டிப்பான ஐபிஎஸ் அதிகாரி என பெயரெடுத்தவர். சிபிசிஐடி எஸ்பியாக பவானீஸ்வரி இருந்த போது நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கரூர், குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில், விரைவாக விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டை பெற்றுத் தந்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் சென்னை நகரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த போது பல்வேறு சீரிய மாற்றங்களை கொண்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்கு மண்டல ஐஜியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் 8 மாவட்ட எஸ்பிக்களும் நேரில் சந்தித்து தங்களை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.