நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (30) வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். 20.09.2023 அன்று காலை சுமார் 11.00 மணியளவில், ஆட்டோவில் சவாரிக்காக, மெரினா, நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக சிலர் கூவம் ஆற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகேஷ், ஆட்டோவை ஓரம் நிறுத்தி பார்த்தபோது, ஒரு பெண் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்ததும், அந்த பெண் சேற்றில் மூழ்கி கொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனே, மகேஷ் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கயிறு வழியாக, கூவம் ஆற்றில் இறங்கி சேற்றில் சிக்சி தவித்த பெண்ணை மீட்டு, கயிறு கட்டி பாலத்தில் கொண்டு சேர்த்தார். பின்னர் காவல்துறை உதவியுடன் மகேஷ் மற்றும் மீட்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பெற்றனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், ஒரு வருடத்திற்கு முன், சென்னைக்கு வந்து மேற்படி முகவரியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதும், இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 மகன் உள்ளதும் தெரியவந்தது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் மகேஷை இன்று (21.09.2023) நேரில் அழைத்து பண வெகுமதி ரூ. 5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.