ஆவடி கமிஷனர் சங்கர் நடத்திய ரவுடிகள் வேட்டை: 25 பேர் கூண்டோடு கைது

162

ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சங்கர் ரவுடிகள் வேட்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 13.09.2023 இரவு செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் நடத்திய ரவுடிகளின் தேடுதல் வேட்டையில் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் மாவட்டத்தில் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று 14.09.2023 ஆவடி துணை ஆணையாளர், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். திருவேற்காட்டைச் சேர்ந்த ரவுடி நந்தா என்கிற நந்தகுமார் நீண்ட நாட்களாக வழக்குக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

அதனை நிறைவேற்ற கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ரவுடி நந்தா இன்று கைது செய்யப்பட்டார். மேலும் கைதான ரவுடிகளில் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 5 பேர் , போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஒருவர், வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மேலும் சரித்திர பதிவேடு எதிரிகள் 7 பேர் காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டனர். மேலும் அம்பத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடை நரேஷ்பாபு, செங்குன்றம் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய ரிஷி, அன்வர், ஆகியோரை நீதி மன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரவுடிகளின் இந்த கைது நடவடிக்கைகள் தொடரும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.