கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.




திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் பாபு (எ) டில்லிபாபு (வயது 55). நேற்று முன்தினம் (17.08.2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெர்படா குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் பெருமாள் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்துவிடு. நான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இல்லையேல் உன்னை என்ன செய்வேன் என தெரியாது என மிரட்டியுள்ளார். இது குறித்து வெங்கடேஷ் பெருமாள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, டில்லிபாபு என்ற நபர் இங்கு வேலை செய்யவில்லை எனவும், தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக யாரோ பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.


உடனே, இது குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்டுடியோ இயக்குநர் சரவணமுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ் (எ) சீனிவாசன் (27) மற்றும் அனிஷ் (எ) ஜெகநாத் அனிஷ் (வயது 24) ஆகியோருக்கு கள்ளக்குறிச்சியை வெங்கடேஷ் பெருமாள் என்பவர் பல லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் எதிரிகள் ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோர் மஞ்சுநாதன் என்பவரது உதவியுடன், முக்கிய பாபு (எ) டில்லிபாபுவிடம் அந்தப் பணத்தை வசூல் செய்து தரச் சொல்லியுள்ளனர். அதன்பேரில் பாபு வெங்கடேஷ் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டியதும் தெரியவந்தது.
அதன்பேரில், ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி, நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மிரட்டல் விடுத்த திருவண்ணாமலை, செங்கம் பகுதியைச் சேர்ந்த பாபு (எ) டில்லி பாபு (55), தஞ்சாவூர் ஹரிஷ் (எ) சீனிவாசன் (27), அனிஷ் (எ) ஜெகனாத் (24), மஞ்சுநாதன் (34), சிதம்பரம் (37), ராமதாஸ் (37), மணிகண்டன் (27) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மேற்படி 7 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (18.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.