சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில், நகரம் முழுவதும் Swiggy, Zomato, Zepto, Blinkit, Big Basket, Pink Rapido, Porter மற்றும் Flipkart போன்ற மின்வணிக மற்றும் விநியோக சேவைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்காக, 25.02.2026 அன்று வேப்பேரி, பி.கே.என் மண்டபத்தில் “சாலை பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. சென்னை பெருநகரில் விநியோக சேவைகளில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவதால், அவர்கள் கடும் போக்குவரத்து நெரிசல் சூழ்நிலைகளில் தங்கள் பணியை மேற்கொள்வதை கருத்தில் கொண்டு, அவர்களின் சாலை பாதுகாப்பை உறுதி செய்வது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் முக்கிய முன்னுரிமையாகும்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை தெற்கு போக்குவரத்து இணை ஆணையாளர் விஜயகுமார் வழிகாட்டுதலிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையாளர்கள், மற்றும் GIG தளங்களின் மேலாளர்கள் மற்றும் பெண் GIG தொழிலாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மற்றும் பாதுகாப்பு முயற்சியாக, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பெண் GIG தொழிலாளர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஐ.எஸ்.ஐ சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எப்போதும் சாலை விபத்துகளை குறைத்து, சென்னை பெருநகரில் பணியாற்றும் பெண்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.